பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Sunday 24 January 2016

வாசிப்பை நேசிக்கும் ஆளுமை !!

வாசிப்பை நேசிக்கும் ஆளுமை !!




                    ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். சிறு வயதில், நாட்டு டப்பு தொடர்பாக நிறையக் கேள்விகள் என்னுள் முளைத்தன; அதற்கான பதில்களைத் தேடினால், பாடப் புத்தகத்தில் இருக்காது. இப்படித்தான் என் வாசிப்பு தொடங்கியது. அரசியல் ஆர்வம் வாசிப்பை அதிகமாக்கியது. வாசிப்பு இல்லாவிட்டால் உண்மையான அரசியலைத் தெரிந்துகொள்ள முடியாது எனும் உண்மையை நான் பணியாற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ இயக்கம் உணர்த்தியது.
                    படிக்கிற காலத்தில் புத்தகங்கள் வாங்குவதற்காகவே மூர் மார்க்கெட் வருவேன். பழைய புத்தகங்கள், அரிய புத்தகங்கள். அதே மாதிரி பைகிராப்ட்ஸ் சாலைக்குப் போவேன். புத்தகங்கள் வாங்குவதைத் தாண்டி, புத்தகக் கடைகளுக்குச் சென்று புத்தகங்களைப் பார்ப்பதும் புரட்டுவதுமே ஒரு அலாதியான அனுபவம்தான்.
                   சிக்கனமாகச் செலவு செய்பவன்தான். ஆனாலும், இயக்கப் பணிகளுக்காக டெல்லி, மும்பை, கொல்கத்தா என்று போனால், கட்சி அலுவலகத்திடம் கடனாளி ஆகிவிடுவேன். புத்தக ஆசைதான்!
                   கடலூரில் இருக்கும்போது 4 வீடுகள் மாறினேன். நெய்வேலியில் இருக்கும்போது 4 வீடுகள் மாறினேன். 1992-ல் சென்னை வந்த பிறகு 4 வீடுகள் மாறிவிட்டேன். இப்படி ஒவ்வொரு முறையும் வீடுகளை மாற்றும்போது, புத்தகங்களைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்வது பெரிய சவால். எங்கள் வீட்டில் உள்ள பெரிய சுமையும் அவைதான்; பெரிய சொத்தும் அவைதான்.
                    மார்க்ஸிய தத்துவம் பற்றிய மூலநூல்கள், ரஷ்ய இலக்கியங்களானதாய்’, ‘வீரம் விளைந்ததுபோன்ற நாவல்கள், ‘வால்காவிலிருந்து கங்கை வரை’, காந்தியின்சத்தியசோதனை’, பாரதி-பாரதிதாசன் கவிதைகள், அம்பேத்கர், பெரியார் நூல்கள் இவையெல்லாம்தான் என் பார்வையை விசாலப்படுத்தின.
                   ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது புதிய கரு ஒன்று கிடைத்தால் அது மிகுந்த மனநிறைவை அளிக்கும். ஒரு விஞ்ஞானி தன்னுடைய அறிவியல் கண்டுபிடிப்பின்போது எப்படி மகிழ்ச்சி அடைகிறாரோ அத்தகைய உணர்வு எனக்கு ஏற்படுவதுண்டு. உதாரணமாக: எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய், சென்னையிலிருந்து வெளியானஆரியாஎன்ற இதழுக்கு 1901-ல் இந்தியாவில் உள்ள சாதிய ஒடுக்குமுறை பற்றி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இக்கடிதத்தைதி இந்துஆங்கில நாளிதழ் வெளியிட்டிருந்தை வாசித்தேன். இன்றைய தகவல் தொடர்பு வசதிகளெல்லாம் இல்லாத அக்காலத்தில் இந்தியாவில் நிலவும் சாதியக் கொடுமையைப் பற்றி டால்ஸ்டாய் பேசியிருந்தது ஆச்சரியப்படுத்தியது.
                  அரசியல்வாதிகள் படிப்பதற்கு நேரம் கண்டுபிடிப்பது ஒரு போராட்டம் என்று சொல்வார்கள். என்கூட எப்போதுமே புத்தகங்களை வைத்துக்கொள்வதால், வாசிப்பதற்கான நேரத்தை உருவாக்கிக்கொண்டே இருப்பேன். வெளியூர்ப் பயணங்களில் மூட்டையில் புத்தகங்களே அதிகம் இருக்கும். ரயில் பயணங்கள் படிப்பதற்கான சரியான வாய்ப்புகளில் ஒன்று.
                   அப்புறம், எங்கள் வீட்டில் எல்லோருமே நல்ல வாசகர்கள். என் மனைவி நூலகர். ஆகையால், வாசிப்பதை மேலும் மேலும் உற்சாகப்படுத்திக்கொள்வோம். மக்கள் வாழ்வதற்காகப் போராடுகிறார்கள். கம்யூனிஸ்ட் டுகள் போராடுவதற்காக வாழ்கிறார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. வாழ்க்கை, போராட்டம் இரண்டிலுமே வாசிப்பு எனக்குப் பெரிய உந்துசக்தி.!
திரு. ஜி. இராமகிருஷ்ணன், தமிழக மாநிலச் செயலர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் .
நன்றி : திரு. ரெங்கராஜன், முகநூல் நண்பர்.

4 comments:

  1. வாசிக்காத நாட்கள் எல்லாம் சுவாசிக்காத நாட்கள்
    அருமை நண்பரே

    ReplyDelete
  2. ஆகா..... சொல்ல வார்த்தைக்கள் இல்லை...

    ReplyDelete
  3. தொடர்ந்த வாசகரே தொடர்ந்த அறிவாளியாகவும் தொடர்ந்து தலைவராகவும் இருக்க முடியும் என்பதற்கான எடுத்துக் காட்டை எழுதிய தோழரே! வணக்கம். இவ்வாறான நல்ல பதிவுகளைத் தொடர்ந்தும் எழுத வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. ஆஹா.. அருமை...

    எங்க தமிழய்யா வீட்டிலும் இப்படித்தான் புத்தகங்களே அதிகம்... ஒரு அறை முழுவதும் புத்தகம் அவர் இருக்க இடம் தவிர்த்து சுற்றிலும் புத்தக்மாய் இருக்கும்... எப்போதும் எழுத்து.... வாசிப்பு....

    ReplyDelete