பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Sunday 14 August 2016

ஒரு கவிதையின் முற்றுப்புள்ளி !




சிறகொடிந்து கிடக்கிறது..
முத்துக்குமாரெனும்
முத்துக் கவிதை !!

கன்னிகாபுரத்துக் கவிதை
காற்றோடு கலந்து விட்டது !!

ஆனந்த யாழை மீட்டியவனே,
ஆனந்தமாய் உறங்குகிறாயோ ?.

சமரசமில்லாக் கவிஞன் நீ !!
சமத்துவம் பேசிய கவிஞன் நீ !!

காந்தித் தாள்களில்
சொற்களை அடகுவைக்காத
காந்தீயக் கவிஞன் நீ  !!

குழந்தைகள் நிறைந்த வீட்டில்
பட்டாம் பூச்சி விற்றவன் நீ  !!

சுதந்திரச் சிற்பியாய்
சொற்களைச் செதுக்கியவனே..!.

எனக்குத்
தூக்கம் வராத
பல இரவுகளில்
தாலாட்டுப் பாடினாய்.

திண்மை வரிகளால்
என்
துக்கத்தைத்
தேற்றினாய் !!

இருண்ட வரலாற்றை எழுதிய
காலனின் புத்தகத்தில்
இன்னுமொரு
இருண்ட பக்கம் !!

பாரதி,
பட்டுக்கோட்டையார் வரிசையில்..
நீயும் !!

அறிவியலே !
மஞ்சள் காமாலையை
மரணிக்கச் செய்யும்
ஆயுதத்தைக் கண்டறியும்
விஞ்ஞானிகளை
என் வகுப்பறைக்குக் கொடு !!


இறந்துபோனதை 

அறிந்த பிறகுதான்

இறக்க வேண்டுமெனச்

சொன்னாயே ?

எப்போது எழுந்து வருவாய் ?

காற்றில் இலைகள்

பறந்த பிறகும் 

கிளையின் தழும்புகள்

அழிவதில்லை

கவியுலகின்
கிளைத் தழும்பன்றோ  நீ !

உன்
ஆன்மா
அமைதியாய் இளைப்பாறட்டும்..

ஆதவன் உதயமாவான் ..
உன்
வானத்தின் கிழக்கில்.

    ஆழ்ந்த இரங்கலுடன்
    சி.குருநாதசுந்தரம்.


1 comment:

  1. நல்ல கவிஞன்...
    வாழ வேண்டியவன்...
    பாரதி, பட்டுக்கோட்டை ஆகிவிட்டான்...
    அவனின் ஆன்மா சாந்தியடையட்டும்..

    ReplyDelete